திருகோணமலை மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள முதுபெரும் தமிழ் கிராமமே திரியாய் ஆகும். விவசாயத்திற்கும் விலங்கு வேளாண்மைக்கும் நில, நீர்வளங்களைக் கொண்டு பாலும் தேனும் குறைவுபடாத, செல்வச் செழிப்பு மிக்க தனிச்சிறப்புடன் காணப்படும் இக்கிராமம் தமிழர் தம் வரலாற்றையும் பண்பாட்டையும் சமூகத்திற்கு வெளிப்படுத்தும் சான்றாகும்.
இவ்வாறான சிறப்புமிக்க இக்கிராமம் மிக நீண்ட கல்வி வரலாற்றையுடையது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை அந்தவகையில் வரலாற்றுச் சான்றுகளின் பிரகாரம் இங்கு 1884ம் வருடம் மெதடிஸ்த மி~ன் போதகர்களால் தற்போது பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள இடத்திற்கு முன்னுள்ள இடத்தில் 170 ரூபா செலவில் கட்டடம் அமைக்கப்பட்டு பாடசாலை முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்டதாக அறியமுடிகின்றது. தொடர்ந்து அரசாங்கம் பாடசாலைகளைப் பொறுப்பெடுத்து செயற்படுத்த தொடங்கியதன் பின்னர் பாடசாலை இடமாற்றப்பட்டு தற்போதுள்ள இடத்தில் இயங்கத்தொடங்கியது. கடந்த பல தசாப்தங்களாக நாட்டில் ஏற்பட்ட யுத்த நிலைமையினால் காலத்திற்கு காலம் பாடசாலை மூடப்பட்டு வெவ்வேறு இடங்களில் தற்காலிகமாக இயங்கி வந்துள்ளது 1985ல் மூடப்பட்ட பாடசாலை மீளவும் 1987ல் ஆரம்பமானது மீண்டும் 1990ல் மூடப்பட்டு 2003.04.31 ஆரம்பிக்கப்பட்டது. அன்றுமுதல் இன்று வரை பல்வேறு வளப்பற்றாக்குறைகளுடன் இயங்கி வருகின்றது
இப்பாடசாலையில் 1947 மார்ச் மாதம் 01ம் திகதி ஆரம்பப்பிரிவு மற்றும் தரம் 06 வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும், தரம் 10 வரையான வகுப்புகள் 1966லும் உயர்தர கலைப்பிரிவு வகுப்புகள் 1977ம் வருடம் மார்ச் மாதம் 01ம் திகதியும் தொடங்கியதாக வாய்மூலமான அறிக்கைகள் தெளிவுபடுத்துகின்றன.





